சீன அதிபர் முன்னிலையில் முன்னாள் அதிபரை கட்சி கூட்டத்தில் இருந்து வெளியே இழுத்து சென்றது ஏன்? அரசு விளக்கம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இருந்து முன்னாள் அதிபர் திடீரென வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-23 09:16 GMT

பீஜிங்,

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார். 

இந்நிலையில், சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது.கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், அதிபர் ஜின்பிங், பிரதமர் லி கெகியாங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஹூ ஜிந்தாவோவும் (வயது 79) கலந்து கொண்டார்.

ஒரு வார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் கூட்டத்தில் இருந்து முன்னாள் அதிபர் திடீரென வெளியேற்றப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கட்சி கூட்டம் நிறைவடையும் சூழலில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி முன்னிலையில், ஜிந்தாவோவை கட்சியின் அடையாளம் தெரியாத பிரமுகர்கள் வெளியே இழுத்து சென்றனர். ஜின்பிங்கை நோக்கி ஜிந்தாவோ ஏதோ கூறுகிறார். ஆனால், அது கேமராவில் தெளிவாக கேட்கவில்லை.

இந்த சம்பவம் நடந்தது ஏன்? என்பதற்கான காரணம் பற்றி தெளிவாக எதுவும் தெரிய வரவில்லை. அவர் வெளியேற்றப்பட்டபோது, ஜின்பிங் அருகே நின்றிருந்த பிரதமரும் எதுவும் கூறாமல் அமைதியாக நின்று விட்டார்.

இந்த நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அவசரமாக வெளியேறினார் என்று அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் ஓய்வெடுப்பதற்காக கட்சிக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள ஒரு அறைக்கு சக பணியாளார்களால் கொண்டு செல்லப்பட்டார். இப்போது அவர் நலமாக உள்ளார் என்று அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்