சீனா: வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா பயண கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு

சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா பயண கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2023-01-08 04:07 GMT



பீஜிங்,


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றானது, சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வருகிற ஜனவரி 8-ந்தேதி (இன்று) முதல் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வர கூடிய விமான பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளில் ஒன்றான தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், சீனாவுக்கு வரும் பயணிகள் 48 மணிநேரத்திற்குள் எடுத்த கொரோனா தொற்றில்லா சான்றை உடன் வைத்திருக்க வேண்டும். முக கவசம் அணிந்து வர வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் குடிமக்களுக்கான விசா அனுமதியும் இன்று முதல் தொடங்கும் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி சீன குடியுரிமை அதிகாரிகள் கூறும்போது, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு பயணம் ஆகியவற்றுக்கு பாஸ்போர்ட்டுகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவற்றை முறையாக பரிசீலித்து அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு வெளியான செய்தியில், எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தி, வெளிநாட்டு பயணிகளின் வருகை தொடங்கும் என்றும் அது சர்வதேச கொரோனா சூழல் அடிப்படையில் அமையும் என்றும் தெரிவித்து இருந்தது.

எனினும், அந்நாட்டில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களில் ரகசியம் காக்கப்படுகின்றன. இதனால், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை தொடர்ந்தே வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் பூஸ்டர் டோஸ் உள்பட தடுப்பூசி செலுத்துவது முக்கியம் வாய்ந்தது. அது மருத்துவமனையில் சேருவது மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பும் சுட்டி காட்டியுள்ளது.

சீனா மருத்துவமனையில் சேரும் மற்றும் உயிரிழப்பு ஆகிய நோயாளிகளின் நம்பக்தகுந்த தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதானம், இதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். விரிவான, உண்மையான வைரசின் மரபணு தொடர் பற்றிய விவரங்களையும் வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

சீனாவில் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று பாதிப்பு மக்களை துயரில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், மக்களிடம் இதற்கு வரவேற்பு இல்லை. தொடர் போராட்டங்களால் அரசு ஊரடங்கை தளர்த்தி அறிவித்தது.

இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் தொடக்கத்தில் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.

இந்நிலையில், ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்டு கட்சி அரசின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கையால் அந்நாட்டு சுகாதார துறை விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது என இன்சைடு ஓவர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

சீனாவில், 2020-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு இறுதி வரையில், உற்பத்தி மற்றும் சேவை துறையானது வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது என பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூஜ்ய கொரோனா கொள்கை என்ற பெயரிலான நடவடிக்கையால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்த அந்நடவடிக்கை தவறியது என இன்சைடு ஓவர் அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. இது சீன மக்கள் தொகையில் 17.65 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்தே இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கின. சீனாவில் இருந்து வர கூடிய சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்