நிலநடுக்கத்தின் போது பிறந்த குழந்தை - இடிபாடுகளில் சிக்காமல் உயிர் பிழைத்த அதிசயம்
நிலநடுக்கத்தால் தாய், தந்தை உயிரிழந்த நிலையில், குழந்தை மட்டும் இடிபாடுகளில் சிக்காமல் உயிர் பிழைத்துள்ளது.
டமாஸ்கஸ்,
துருக்கியில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முழுவதுமாக முடக்கி போட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அந்த இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பியவர்கள் தங்கள் குடும்பத்தினரை தேடி அலையும் காட்சிகள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன.
சிரியாவிலும் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வடகிழக்கு சிரியாவில் உள்ள அப்ரின் பகுதியில், ஜெண்டெரெஸ் என்ற இடத்தில் நிலநடுக்கத்தால் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த மீட்பு பணிகளின் போது கட்டிய இடிபாடுகளுக்கு இடையே புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில், அந்த குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு அந்த குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி அந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில், குழந்தை மட்டும் இடிபாடுகளில் சிக்காமல் உயிர் பிழைத்துள்ளது. இவர்களது குடும்பம் சிரியாவில் ஏற்பட்ட கடுமையான போர் காரணமாக அப்ரின் பகுதிக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.
கட்டிட இடிபாடுகளில் இருந்து குழந்தையை மீட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் குடும்ப உறவுகளை இழந்து நிற்கும் நிலையில், புதிதாக பிறந்த குழந்தை ஒன்று அதிசயமாக உயிர் பிழைத்த சம்பவம் மீட்பு பணியில் ஈடுபடுவோர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.