சந்திரயான்-3 சாதனை: கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை உள்ளிட்ட அமெரிக்க பிரபலங்கள் வாழ்த்து

சந்திரயான்-3 திட்ட சாதனை தொடர்பாக கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்க பிரபலங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-24 23:45 GMT

வாஷிங்டன்,

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை படைத்துள்ளது. இதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம் நிகழ்த்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்களுக்கு இது நம்ப முடியாத சாதனை. இத்திட்டத்தில் உங்களுடன் கூட்டாளியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா'வின் தலைவர் பில் நெல்சனும் இத்திட்டத்தில் இந்தியாவுடன் கூட்டாளியாக இருப்பதில் பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், ''இனிவரும் ஆண்டுகளில், இந்தியாவுடன் விண்வெளி ஆராய்ச்சியில் கூட்டு செயல்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக இருக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்க-இந்திய எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, ''நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை. நிலவை பற்றிய ஆய்வில் மாபெரும் நடவடிக்கை'' என்று கூறியுள்ளார். அமெரிக்க எம்.பி.க்கள் ஜான் கோர்னின், ரிச் மெக்கார்மிக், மைக்கேல் மெக்கால், பிராட் ஷெர்மன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிவியல் பிரிவு, ''இஸ்ரோவின் வெற்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களின் எதிர்காலத்துக்கு வெளிச்சத்தை பாய்ச்சும்'' என்று கூறினர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சத்யா நாதெள்ளா தனது செய்தியில், ''சந்திரயான்-3 தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கு என்ன ஒரு வியத்தகு தருணம்'' என்று கூறியுள்ளார். சுந்தர் பிச்சை தனது செய்தியில், ''இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது'' என்று கூறியுள்ளார்.

பன்னாட்டு நிதியத்தின் (ஐ.எம்.எப்.) முதன்மை துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத், அமெரிக்கவாழ் ஆப்பிரிக்க பாடகி மேரி மில்மென், வானியல் விஞ்ஞானி நீல் டிகிராசி டைசன், விண்வெளி தொடர்பான புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் மைக்கேல் சல்லா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் விண்வெளி திட்டங்களை கேலிச்சித்திரங்கள் மூலம் கேலி செய்து வந்த அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பிரபல பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்