நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் சாத்தியம் - ஹமாஸ் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

Update: 2024-03-03 16:40 GMT

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களில் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. மேலும் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதனால், எகிப்திய எல்லையையொட்டிய தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி செல்ல திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் தங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் காசா போர் நிறுத்தம் சாத்தியமே என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹமாஸ் மூத்த அதிகாரி, இடம்பெயரச் செய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்புவது மற்றும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட தங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தம் சாத்தியம் என்று தெரிவித்துள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்