டிரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு; ஏப்ரல் 15-ல் விசாரணை

டிரம்பின் வழக்கறிஞர்கள், இந்த விவகாரத்தில் முந்தின விசாரணைக்கான 1 லட்சம் பக்கங்களுக்கும் மேலான ஆவணங்கள் சமீபத்திலேயே எங்களுக்கு கிடைக்க பெற்றன என்று கூறினர்.

Update: 2024-03-26 05:35 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நடப்பு ஆண்டு இறுதியில், அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பைடன் மீண்டும் போட்டியிட ஆர்வம் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் (வயது 77) தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவில் உறுதியாக உள்ளார். இதில் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகி காணப்படுகிறது.

தொழிலதிபரான டிரம்ப், 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, ஆபாச பட நடிகை ஒருவர் எழுப்பிய குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தியது. டொனால்டு டிரம்ப் மீது ஏற்கனவே 10-க்கும் கூடுதலான பெண்கள், பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது. அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலித்தது.

டிரம்ப், கடந்த காலத்தில் ஆபாசபட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்சுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விசயத்தில், ஆபாச பட நடிகையுடனான திருமணத்திற்கு மீறிய உறவு பற்றி பேசாமல் இருப்பதற்காக, அந்த நடிகைக்கு டிரம்ப் ரூ.1.08 கோடி பணம் கொடுத்துள்ளார் என்று எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையானது.

எனினும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார். 2021-ம் ஆண்டு வரை இந்த வழக்கு பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. டிரம்புக்கு எதிராக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேன்ஹாட்டன் கோர்ட்டில், டேனியல்சை அமைதிப்படுத்த பணம் கொடுத்தது உள்ளிட்ட 34 கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில், டிரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகை தொடுத்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதில், டிரம்பின் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் கூறும்போது, தேர்தலில் போட்டியிட டிரம்ப் முடிவு செய்த சூழலில் விசாரணை நடத்துவது என்பது முறையற்றது என வாதிட்டனர்.

கடந்த 15-ந்தேதி தொடங்கிய இந்த வழக்கு விசாரணையின்போது, 30 நாள் காலஅவகாசம் வேண்டும் என்று டிரம்பின் வழக்கறிஞர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதேபோன்று, இந்த விவகாரத்தில் முந்தின விசாரணைக்கான 1 லட்சம் பக்கங்களுக்கும் மேலான ஆவணங்கள் சமீபத்திலேயே எங்களுக்கு கிடைக்க பெற்றன என்று கூறினர்.

இதனை, நீதிபதி ஜுவான் மானுவேல் மெர்சன் ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து, இதுபற்றிய வழக்கு விசாரணை ஏப்ரல் 15-ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவர் குற்ற வழக்கு குற்றச்சாட்டு மற்றும் விசாரணைக்கு ஆளாவது என்பது இது முதல் முறையாகும்.

வருகிற நவம்பர் 5-ந்தேதி அதிபர் தேர்தலுக்கு முன், ஒன்று குற்றவாளி அல்லது விடுதலையாவது என எந்த வகையானாலும், இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் டிரம்ப் உள்ளார். இந்த தேர்தலில், அதிபர் பைடனை எதிர்த்து போட்டியிடும் ஆர்வத்தில் உள்ளார். எனினும், இந்த வழக்கு விசாரணை முடிவடையாமல் நீண்டு கொண்டே சென்றால், அது அதிபர் தேர்தலில் எதிரொலிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்