கனடா: விமானம் புறப்படும் முன் கதவை திறந்து கீழே குதித்த நபரால் பரபரப்பு

அந்த நபர் விமானத்தில் ஏறும்போது, மற்ற பயணிகளை போன்று இயல்பாகவே காணப்பட்டார்.

Update: 2024-01-11 06:46 GMT

டொரண்டோ,

கனடாவில் உள்ள டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி ஏர் கனடா விமான நிறுவனத்தின் போயிங் 747 ரக விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

அதில் இருந்த பயணி ஒருவர் அமர்வதற்கு பதிலாக, விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் திடீரென விமானத்தின் கதவை திறந்து கொண்டு வெளியே குதித்திருக்கிறார். 20 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் அவசரகால சேவை துறையினர் அந்த பகுதிக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அந்நபரை ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்டோர் இணைந்து மீட்டனர். இதனால், 6 மணிநேரம் வரை விமானம் புறப்பட்டு செல்ல காலதாமதம் ஏற்பட்டது.

அந்த நபர் விமானத்தில் ஏறும்போது, மற்ற பயணிகளை போன்று இயல்பாகவே காணப்பட்டார். இதுபற்றி அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் இந்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டாரா? என்ற விவரம் வெளிவரவில்லை.

சமீபத்தில், கனடாவின் டொரண்டோ நகரில் இருந்து கால்கரி நோக்கி ஏர் கனடா 137 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் சென்றபோது, திடீரென 16 வயது சிறுவன் எழுந்து பயணி ஒருவரை கடுமையாக தாக்கினான். இதில், அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விமானம், வின்னிபெக் ரிச்சர்ட்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதுபற்றி கனடா போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிராண்ட் பிரெய்ரி பகுதியை சேர்ந்த சிறுவன், குடும்பத்துடன் வந்த நபரை தாக்கியிருக்கிறார் என விசாரணையில் தெரிய வந்தது.

சம்பவம் நடந்ததும் சக பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக அந்த சிறுவனை தடுத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். தாக்குதலுக்கு ஆளான நபருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இதனால், கால்கரிக்கு விமானம் தொடர்ந்து பயணிப்பதில் 3 மணிநேர காலதாமதம் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கான பின்னணி பற்றி தெளிவாக தெரிய வரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்