"மத சுதந்திரத்துக்கு முன்னுரிமை" - தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க மந்திரி ஆண்டனி பிளிங்கன் பேச்சு

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

Update: 2022-10-27 05:00 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று வெளியுறவுத் துறையின் போகி பாட்டம் தலைமையகத்தில் தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதில் பல முக்கிய மனிதர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது:-

தீபாவளி, தர்மத்தின் முக்கியத்துவத்தை, நல்ல நடத்தையை நமக்கு நினைவூட்டுகிறது. தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும், அறியாமையின் மீது அறிவும் பெற்ற வெற்றியைக் குறிக்கும் பண்டிகை தீபாவளி.

மத சுதந்திரம் அமெரிக்காவின் அடிப்படை மதிப்புகளில் ஒன்று. மத சுதந்திரம் என்பது அமெரிக்காவின் அரசியலமைப்பின் விலைமதிப்பற்ற பகுதியாகும். மத சுதந்திரம் என்பது மற்ற நாடுகளுடனும் உலகெங்கிலும் உள்ள மக்களுடனும் பிணைப்பை உருவாக்க உதவுகிறது. மத சுதந்திரத்தை ஆதரிப்பது ஜனாதிபதி ஜோ பைடனுக்கு முன்னுரிமையாக உள்ளது.

இது போன்ற கொண்டாட்டங்கள் மூலம் மத சுதந்திரத்தை ஆதரிக்க முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். மத சுதந்திரத்தை ஆதரிக்க 'கலாச்சார பாதுகாப்பிற்கான அமெரிக்க தூதர்கள் நிதி' உள்ளிட்ட பல முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இதன்மூலம், சேதமடைந்த வரலாற்று கட்டிடங்களை மீட்டெடுக்க உதவுகிறோம்.

தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெறும் இந்த தருணத்தில், உலகெங்கிலும் தங்கள் கலாச்சார மற்றும் மத விடுமுறைகளை சுதந்திரமாக கொண்டாட முடியாதவர்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் எண்ணிக்கை வளர்ந்துள்ளது. அமெரிக்கா முழுவதும் தேசிய அளவில் தீபாவளி கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்தியாஸ்போரா நிறுவனர் எம் ஆர் ரங்கசாமி கூறினார்.

முன்னதாக, ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மனைவி ஜில் பைடன் ஆகியோர் கடந்த திங்களன்று, வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். அதேபோல துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்