ஒபெக் நாடுகளின் முடிவால் சவூதி அரேபியா உடனான உறவை மறு மதிப்பீடு செய்ய அமெரிக்கா முடிவு
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள், பெட்ரோலியம் உற்பத்தியை குறைக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தது.
வாஷிங்டன்,
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (ஒபெக் நாடுகள்) அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பேரல்கள் அளவு குறைக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தது. சர்வதேச வணிக சந்தையில் விலையை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கையை ஒபெக் நாடுகள் மேற்கொண்டுள்ளனர்.
ஒபெக் நாடுகளில் சவூதி அரேபியா, உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக லாபம் ஈட்டும் எண்ணெய் ஏற்றுமதியாளராக இருக்கிறது. இதனால் ஒபெக் நாடுகளின் இந்த முடிவில் சவூதி அரேபியாவிற்கு அதிக பங்கு இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஒபெக் நாடுகளின் இந்த முடிவையடுத்து சவூதி அரேபியாவுடனான, அமெரிக்காவின் உறவுகளை அதிபர் ஜோ பைடன் மறுமதிப்பீடு செய்து வருவதாக வெள்ளை மாளிகை இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில்," எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது ஒபெக் நாடுகளின் முடிவு. ஆனால் சவூதி அரேபியா இந்த அமைப்புகளின் தலைவர் என்பது தெளிவாகிறது. ஓபெக் நாடுகளின் இந்த முடிவு ஜோ பைடனுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவுகளை அதிபர் ஜோ பைடன் மறு மதிப்பீடு செய்து வருகிறார்" என தெரிவித்தார்.