உக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம்- ஜோ பைடன் பரபரப்பு பேச்சு

அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷியா வெற்றி பெறாது என்றும் கூறினார்.

Update: 2024-07-11 02:09 GMT

வாஷிங்டன்,

ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த உக்ரைன், உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கூட்டமைப்பாக கருதப்படும் நேட்டோவில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது. இதனால் கோபம் அடைந்த ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போரை தொடங்கியது. 2 ஆண்டுகளை கடந்தும் போர் முடிவின்றி நீண்டு வருகிறது.

இந்த போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி அளித்து வருவதால் அந்த நாட்டு ராணுவத்தால் ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட முடிகிறது.

அதே வேளையில் நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ரஷியா கடுமையாக எதிர்த்து வருகிறது. நேட்டோவில் இணையும் முடிவை கைவிட்டால் போரை நிறுத்த தயார் என ரஷிய அதிபர் புதின் அண்மையில் தெரிவித்தார். ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதனை நிராகரித்தார்.

இந்த நிலையில் நேட்டோ அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்பட ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளன.

நாங்கள் முக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, போரில்உக்ரைன் முன்னோக்கி செல்வது உறுதி செய்யப்படும்.இந்த போரில் ரஷியா தோல்வி அடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் புதினின் விருப்ப போரில், அவரது இழப்புகள் அதிர்ச்சி அளிக்கின்றன. போரில் 3½ லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷிய துருப்புக்கள் பலியாகினர்.

ஏறக்குறைய 10 லட்சம் ரஷியர்கள், பெரும்பாலும் இளைஞர்கள் ரஷியாவை விட்டு வெளியேறி உள்ளனர், ஏனெனில் அவர்கள் ரஷியாவில் எதிர்காலத்தை காணவில்லை.போர் தொடங்கியபோது 5 நாட்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்று அவர் (புதின்) நினைத்தார். 2½ ஆண்டுகள் கழித்து இன்னும் நிற்கிறது, தொடர்ந்து நிற்கும். இந்த போருக்கு முன், நேட்டோ உடைந்து விடும் என்று புதின் நினைத்தார் என்பது அனைத்து நட்பு நாடுகளுக்கும் தெரியும்.இன்று, நேட்டோ அதன் வரலாற்றில் இருந்ததை விட பலமாக உள்ளது. இந்த அர்த்தமற்ற போர் தொடங்கிய போது, உக்ரைன் ஒரு சுதந்திர நாடாக இருந்தது. இன்றும் அது சுதந்திர நாடாகவே உள்ளது. இந்த போரில் ரஷியா வெற்றி பெறாது. உக்ரைனே வெற்றி பெறும்.உலக பாதுகாப்பின் அரணாக நேட்டோ உள்ளது என்பதை நினைவில் நாம் கொள்வோம்" இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்