டிரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கிவிட்டேன் - ஜோ பைடன்
டிரம்ப் உடனான விவாதத்தின்போது கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.;
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாத நிகழ்ச்சிகளின்போது அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள். குறிப்பாக, வெளியுறவு கொள்கைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள்.
அந்த வகையில் சிஎன்என் செய்தி நிறுவனம் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் கடந்த 28ம் தேதி நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த விவாதத்தில் டிரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆனால், இந்த விவாதத்தின்போது டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பைடன் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும், விவாதம் முழுவதும் டிரம்ப்பின் ஆதிக்கமே இருந்தது. விவாதத்திற்குப்பின் நடந்த வாக்கெடுப்பில் விவாதத்தில் டிரம்ப் வெற்றிபெற்றதாக முடிவுகள் வெளியாகின. இதனால், பைடனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சொந்த கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களே ஜோ பைடனுக்கு பதிலாக வேறு யாரையாவது அதிபர் வேட்பாளராக நிறுத்தலாமா? என திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விவாத நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக நான் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். அதில் மிகவும் சோர்வாக இருந்தேன். இந்த விவகாரத்தை நான் சரிவர கையாளவில்லை. எனது அதிகாரிகள் கூறியதையும் நான் கேட்கவில்லை. விவாத நிகழ்ச்சியின்போது மேடையிலேயே நான் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன். நான் விவாத நிகழ்ச்சியில் சரிவர செயல்படவில்லை. அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.