தைவானுக்கு ரூ.8,688 கோடிக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்; சீனா எதிர்ப்பு

தைவானுக்கு 1.09 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.;

Update:2022-09-03 22:39 IST

வாஷிங்டன்,

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்கள் தொடர்நது தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பதற்றத்துக்கு மத்தியில் தைவானுக்கு 1.09 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8ஆயிரத்து 688 கோடி) மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போர் கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஹார்பூன் ஏவுகணைகள், எதிரி ஏவுகணைகளை நடுவானில் மறித்து தாக்கி அழிக்கும் சைட்விண்டர் ஏவுகணைகள் மற்றும் அதிநவீன ஏவுகணை, ரேடார் கண்காணிப்பு அமைப்புகளையும் தைவானுக்கு, அமெரிக்கா விற்பனை செய்ய உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த செயலுக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்காவில் உள்ள சீனா தூதரகம் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்