போலியோ முகாமுக்கு முன்... காசாவை தாக்கிய இஸ்ரேல்; 49 பேர் பலி

காசாவில் பயங்கரவாதிகளை தாக்கி, அவர்களுடைய ராணுவ உட்கட்டமைப்பை தகர்த்தோம் என இஸ்ரேல் படையினர் கூறினர்.

Update: 2024-09-01 04:13 GMT

நோக்லாக்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், தொடர் போரால் காசாவில் பலருக்கு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில், காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முடிவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு 8 மணிநேரம் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் படைகள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

இந்த சூழலில், அதிகாரப்பூர்வ முகாம் செயல்பட தொடங்குவதற்கு முன், நாசர் மருத்துவமனை வார்டுகளில் அடையாள முகாம் நடத்தி, சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நல பணியாளர்கள் முகாமுக்கு தயாரான நிலையில், காசா முனை பகுதியில் அமைந்த அகதிகள் முகாம்களில் ஒன்றான நசீரத் பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தினர்கள் ஆவர்.

காசாவில் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், 49 பேர் வரை மொத்தம் உயிரிழந்து உள்ளனர். எனினும், பயங்கரவாதிகளை தாக்கி, அவர்களுடைய ராணுவ உட்கட்டமைப்பை தகர்த்தோம் என இஸ்ரேல் படையினர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்