வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: முகமது யூனுஸ்

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால், அவரை நாடு கடத்த வேண்டும் என முகமது யூனுஸ் கூறியுள்ளார்.;

Update: 2024-09-26 15:07 GMT

டாக்கா,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. பொது சபை நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக வங்காளதேச தலைமை ஆலோசகரான, பேராசிரியர் முகமது யூனுஸ் சென்றுள்ளார். வங்காளதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைவராகவும் பதவி வகித்து வரும் அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். இதன்படி, பிரதமர் பதவிக்கு போட்டியிட ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா? என கேட்டதற்கு நான் அப்படி தெரிகிறேனா? என பதிலுக்கு கேட்டார்.

அவர் தொடர்ந்து, வங்காளதேசத்தில் தேர்தல் நடத்துவதற்கு கால அளவு எதுவும் தன்னிடம் இல்லை என கூறியதுடன், இதற்காக பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் அடுத்து வரும் மாதங்களில் சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்பு, நாட்டில் தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், இந்தியாவில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால், அவரை நாடு கடத்த வேண்டும். நீதியின் முன் அவரை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்தபோது, கடந்த ஜூலையில் மக்கள் போராட்டம் தொடங்கியது. அரசு வேலைகளில் இடஒதுக்கீடு விவகாரம், வன்முறையாக வெடித்தது. இது பல வாரங்களாக தொடர்ந்து நீடித்தது. வங்காளதேசத்தில் வன்முறையும், கலவரமும் தொடர்ந்ததில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சூழலில், ஹசீனாவுக்கு எதிராக 155 சட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 136 வழக்குகள் படுகொலையுடன் தொடர்புடையவை. அவருக்கு எதிராக, 8 கொலை முயற்சி வழக்குகள், 3 கடத்தல் மற்றும் மனித குலத்திற்கு எதிரான மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 7 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்