சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது: ஆஸ்திரேலியா அறிவிப்பு
உலகெங்கிலும் பரவி வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் கூறினார்.
சிட்னி,
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கமடைந்து வருகிறது. மேலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து உலக நாடுகள் ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு எவ்விதமான புதிய விதிமுறைகள் ஒன்றும் கிடையாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகையில்,
சீனாவிலிருந்து வரும் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் ஆஸ்திரேலியா எந்த மாற்றமும் செய்யவில்லை. நாங்கள் சுகாதார நிபுணர்களிடமிருந்து தகுந்த ஆலோசனைகளை தொடர்ந்து பெறுவோம்.
மேலும், ஆஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் பரவி வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.