கொலை முயற்சி சந்தேகம்...!! வடகொரிய அதிபருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

வடகொரியாவில் கொலை முயற்சி சந்தேகம் எதிரொலியாக அந்நாட்டு அதிபருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-08-28 07:52 GMT

பியாங்யாங்,

வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் அன் இருந்து வருகிறார். அந்நாட்டில், அடிக்கடி அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்யப்படுவது வழக்கம். இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனினும், அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில், அதன் தலைநகர் பியாங்யாங் நகரில் சமீபத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இது, கிம் ஜாங் அன்னை கொலை செய்ய முயற்சி என சந்தேகிக்கப்படுகிறது.

இதனால், தன்னுடைய பாதுகாப்பு பற்றி கிம் ஜாங் கவலை கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கிம் ஜாங்கின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவானது. இதற்காக வெளிநாட்டில் இருந்து நவீன சாதனங்கள் இறக்குமதியாகி உள்ளன.

இதன்படி, அவரது பாதுகாப்பு குழுவில் உள்ளவர்கள் கைப்பெட்டி (பிரீப்கேஸ்) வைத்திருப்பார்கள். சந்தேகத்திற்குரிய நடவடிக்கை எதுவும் தெரிய வரும்போது அல்லது துப்பாக்கி சூடு எதுவும் நடத்தப்பட்டால், பாதுகாப்பு குழுவினர் உடனடியாக கிம் ஜாங்கை பாதுகாக்க தங்களுடைய பைகளை அவரை நோக்கி உயர்த்துவார்கள்.

அந்த பைகள் திறந்து, பாதுகாப்பு கவசம் போன்று கிம் ஜாங்கை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தும். துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடித்து, கைது செய்யும் வரை பாதுகாப்பு குழுவினர் கிம் ஜாங்கை சுற்றி நின்று அவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

எனினும், தலைநகரில் அதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் எதுவும் நடந்ததுபோல் தெரியவில்லை என தென்கொரிய உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அது தொடர்புடைய விசயங்களை பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்