இஸ்ரேல் கிராமத்தில் 40 குழந்தைகள் கொன்று குவிப்பு: அதிர்ச்சி தகவல்

காசா எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய கிராமத்தில் 7ம் தேதி நடந்த தாக்குதலின்போது, சுமார் 40 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

Update: 2023-10-12 06:44 GMT

தாக்குதலால் உருக்குலைந்த கட்டிடங்கள்

டெல் அவிவ்:

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 6வது நாளாக இன்றும் நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்கினர். அத்துடன் காசா முனையை ஒட்டியுள்ள இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.

அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் புகுந்து தாக்குதல் நடத்திய எல்லையோர பகுதிகளை இஸ்ரேல் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அத்துடன் காசா மீது தொடர்ந்து வான்தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளளது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காசா எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய கிராமமான கபார் அசாவில் 7ம் தேதி நடந்த தாக்குதலின்போது, சுமார் 40 குழந்தைகளை ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொன்றிருப்பதாக இஸ்ரேல் ஊடகம் அதிர்ச்சி தரும் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வரும் இஸ்ரேல், இதற்காக கூடுதல் வீரர்களை எல்லைப்பகுதிக்கு அழைத்திருந்தது. வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர். இஸ்ரேல் வீரர்கள் எல்லையோர பகுதிக்கு வந்து ஆய்வு செய்தபோது அங்குள்ள நிலைமை, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக இருந்தது தெரியவந்துள்ளது. அங்கு நடந்த கொடூர கொலைகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்துள்ளனர்.

இதுவரை சுமார் 40 குழந்தைகளின் சடலங்களை இஸ்ரேல் வீரர்கள் மீட்டுள்ளனர். சில குழந்தைகளின் தலைகள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், வீடுகளில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் படுக்கையிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்ததாகவும் வீரர்கள் கூறியிருக்கிறார்கள்.

"இது ஒரு போர் அல்ல, இது ஒரு போர்க்களம் அல்ல.. மாறாக இது ஒரு படுகொலை" என இஸ்ரேல் ராணுவ மேஜர் ஜெனரல் கடுமையாக சாடியிருக்கிறார்.

7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 900 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 2600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்