வங்காள தேசத்தில் நட்சத்திர ஹோட்டலில் தீ வைப்பு: 24 பேர் பலி

அவாமி லீக் கட்சியினருக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Update: 2024-08-06 13:17 GMT

டாக்கா,

வங்காள தேசத்தில் கலவரத்தின்போது, அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஷாஹின் சக்கலாடர் என்பவருக்கு ஜெஸ்சோநகரில் சொந்தமான நட்சத்திர ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலுக்கு அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

ஹோட்டலின் தரைத்தளத்தில் வைக்கப்பட்ட தீ, அதிவேகமாக மேல் தளங்களுக்கும் பரவியது. இதனைத் தொடர்ந்து, ஹோட்டலினுள்ளே தங்கியிருந்தவர்களில் 24 பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும், அவாமி லீக் கட்சியின் மத்திய அலுவலகம், அவாமி லீக் கட்சியின் பல தலைவர்களின் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களும் ஒரே நேரத்தில் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்காள தேச அரசை கண்டித்தும், அவாமி லீக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா நேற்று ராஜினாமா செய்ததையடுத்து அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்