வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு வழக்கு

ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது

Update: 2024-08-21 11:39 GMT

டாக்கா,

வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அரசு வேலைகளில் இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. இதற்கு எதிராக கடந்த ஜூலையில் தொடங்கிய மக்கள் போராட்டம் பல வாரங்களாக தொடர்ந்து நீடித்தது.

இந்த சூழலில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதனால் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைத்தது. எனினும், வங்காளதேசத்தில் வன்முறையும், கலவரமும் தொடர்ந்த நிலையில், பலி எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது.

இந்த போராட்டம் தொடர்பாக ஷேக் ஹசீனா மீது ஏற்கனவே கொலை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி சில்ஹெட் சிட்டி பகுதியில், ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் வன்முறை சம்பவம் தொடர்பாக ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெகானா உள்பட 86 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க்கது .

Tags:    

மேலும் செய்திகள்