ரஷியாவில் இனி ஃபார்முலா-1 கார் பந்தயம் நடத்தப்படாது என அறிவிப்பு
ரஷியாவில் இனி எப்போதும் ஃபார்முலா-1 கார் பந்தயம் நடத்தப்படாது என ஃபார்முலா-1 தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லண்டன்,
ரஷியாவின் சாச்சி நகரில் இந்த ஆண்டு ஃபார்முலா-1 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததால் கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ரஷியாவில் இனி எப்போதும் ஃபார்முலா-1 கார் பந்தயம் நடத்தப்படாது என ஃபார்முலா-1 அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஸ்டெஃபனோ டாமினிகலி தெரிவித்துள்ளார். மேலும் ரஷியாவிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்போவது இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த ஆண்டு ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, உக்ரைன் போர் காரணமாக இந்தியாவிற்கு மாற்றப்பட்டு தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.