துபாயில் கனரக லாரியை சர்வ சாதாரணமாக ஓட்டும் இந்திய பெண்

துபாயில் கனரக லாரியை இந்திய பெண் ஒருவர் சர்வ சாதாரணமாக ஓட்டி வருகிறார்.

Update: 2024-07-11 17:14 GMT

துபாய்,

துபாயில் குறைந்த வயதில் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 22 சக்கரமுடைய கனரக லாரியை இந்திய பெண் பவுசியா ஜகூர் சர்வ சாதாரணமாக ஓட்டி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

"2013-ம் ஆண்டில் முதல் முறையாக அமீரகத்தில் கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றேன். தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு கனரக வாகனங்களுக்கான உரிமம் பெற முடிவு செய்தேன். கண் மற்றும் உடற்கூறு தகுதி தேர்வுகளின்போது அதிகாரிகள் ஆச்சரியத்துடன் என்னை பார்த்தனர்.

ராசல் கைமா மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஒருவர் என்னிடம் கனரக வாகன ஓட்டுனர் உரிமத்துக்கான கண்பார்வை தேர்வுக்கு வந்துள்ள முதல் பெண் நீங்கள் என கூறினார். கனரக வாகன ஓட்டுனர் தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்று உரிமம் பெற்றேன். அதன் பிறகு புஜேராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேர்ந்து லாரி ஓட்டுனராக பணியாற்றினேன்.

எனக்கு குறிப்பிட்ட 'ஷிப்ட்' என்று கிடையாது. நிர்வாகம் கூறும் நேரத்தில் லாரியை ஓட்டினேன். கற்களும், மணலையும் எனது லாரியில் ஏற்றி சென்று வருகிறேன். 2 மற்றும் 3 அச்சுகளுடைய 22 சக்கரங்கள் கொண்ட லாரியை சாலையில் ஓட்டுகிறேன். துபாயில் ஜெபல் அலி பகுதியில் இருந்து அல் குத்ரா பகுதி வரை ஓட்டியுள்ளேன். கார் ஓட்டுவதை விட இந்த கனரக லாரிகளை ஓட்டுவது மாறுபட்டது ஆகும்.

லாரியில் ஏறி அமர்ந்ததும் சாலையும், லாரியின் சக்கரங்களும் நமது கவனத்தில் இருக்க வேண்டும். அடிக்கடி லாரியை பரிசோதித்துக்கொள்வேன். இடையில் பஞ்சர் ஏற்பட்டால் போக்குவரத்துத்துறை உதவி பெற்று டயரை மாற்றிக்கொள்வேன்.

நேரம் கிடைக்கும்போது சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறேன். நான் பிறப்பதற்கு முன்னதாகவே எனது தந்தை இறந்து விட்டார். கடந்த ரமலான் மாதத்தில் எனது தாயாரும் இறந்து விட்டார். எனது தாயாருக்காக ஒரு மகன் போல் வீட்டில் அனைத்து பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டேன்.

இந்தியாவில் பிறந்த நான் அங்கு வணிகவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். பெண்களாலும் இக்கட்டான சூழ்நிலைகளில் கடினமான பணிகளை செய்ய முடியும் என்பதை நான் உலகிற்கு காட்ட விரும்புகிறேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்