அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி- சீன அரசு அறிவிப்பு
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு "ஒரு குழந்தை விதி" கொண்டு வரப்பட்டது.
பிஜிங்,
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு "ஒரு குழந்தை விதி" கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்த படியே வந்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப் பட்டது. கடந்த ஆண்டு 3 குழந்தைகள் பெற்று கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்தது. கடந்த ஆண்டு சீனாவில் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 குழந்தைகளாக குறைந்துள்ளது. அதிக வாழ்க்கை செலவு, கலாச்சார மாற்றம் சிறிய குடும்பங்கள் மீது ஆர்வம் உள்ளிட்டவைகளால் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணங்களாக உள்ளன.
இதையடுத்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றுக்கு மேல் குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய சுகாதார ஆணையம் கொள்கை வழி காட்டுதல்களை வெளியிட்டது. இனப்பெருக்கு ஆரோக்கியத்திற்கான செலவினங்களை அதிகரிக்கவும், நாடு முழுவதும் குழந்தை பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மானியங்கள், வரிகள் தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, இளம் குடும்பங்களுக்கு கல்வி, வீட்டு கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்கப்படுத்த வலியுறுத்தி உள்ளனர். பணக்கார சீன நகரங்கள், அதிக குழந்தைகளை பெற ஊக்குவிப்பதற்காக, வரி வீட்டு கடன், கல்வி சலுகைகள் வழங்குகின்றன.
இது போன்ற அனைத்து மாகாணங்களும் சலுகைகள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே சென்றால் சீனாவின் மக்கள் தொகை 2025-ம் ஆண்டுக்குள் குறைய தொடங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.