அமெரிக்கா: சைக்கோ நபருக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி

அந்த நபர் ஒரு போதை ஆசாமி என்றும் சைக்கோ என்றும் சைனியின் உறவினர் கூறியுள்ளார்.

Update: 2024-01-28 22:23 GMT

நியூயார்க்,

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் லித்தோனியா நகரில் உள்ள வணிக வளாகத்தில் பகுதிநேர ஊழியராக பணியாற்றி வந்தவர் விவேக் சைனி (வயது 25). இந்தியரான இவர், அரியானாவின் பர்வாலா நகரை சேர்ந்தவர். சண்டிகார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் கணினி அறிவியல் படித்திருக்கிறார்.

2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்ற அவர், சமீபத்தில் அலபாமா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பை படித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில், இவர் பணியாற்றிய கடைக்கு ஜூலியன் பால்க்னர் என்ற நபர் வந்துள்ளார். வீடின்றி சுற்றி திரிபவர்கள் அந்நாட்டில் அதிகம். அவர்களில் ஜூலியனும் ஒருவர். 2 நாட்கள் அந்த வணிக வளாகத்தில் அடைக்கலம் கேட்டு வசித்து வந்திருக்கிறார். கடையில் பணியாற்றியவர்கள் சிப்ஸ், கோக் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கொடுத்திருக்கின்றனர். குளிருக்காக ஜாக்கெட் ஒன்றும் கொடுத்துள்ளனர்.

வெளியே அதிக குளிர் காணப்படுகிறது. அதனால், ஜூலியன் அதிகம் பாதிக்கப்படுவார் என்பதற்காக பணியாளர்கள் அவரை வெளியேறும்படி கூறாமல் இருந்துள்ளனர்.

ஆனால், விவேக் அந்நபரை வெளியே செல்லும்படி கூறியுள்ளார். இல்லையென்றால் போலீசை கூப்பிடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனால், ஜூலியன் ஆத்திரமடைந்து உள்ளார். விவேக் வீட்டுக்கு செல்ல புறப்படும்போது, அவரை ஜூலியன் சுத்தியல் ஒன்றால் பலமுறை அடித்து தாக்கியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட முறை கடுமையாக நடத்திய தாக்குதலில் அதே இடத்தில் விவேக் சரிந்து விட்டார்.

ஆனால், அப்போதும் ஆத்திரம் தீராமல் தொடர்ந்து ஜூலியன் தாக்குதல் நடத்தி உள்ளார். இதனை பார்த்த அந்த கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்து, போலீசார் வந்தபோது விவேக் சைனியின் உடல் அருகே, சுத்தியலுடன் ஜூலியன் நின்றிருக்கிறார். சைனி இறந்து விட்டார். அவருடைய உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

விவேக்கின் உறவினர் சிம்ரன் கூறும்போது, ஜூலியன் அந்த கடைக்கு அடிக்கடி வந்து சிகரெட் கேட்பது வழக்கம். விவேக்கும் சிகரெட்டுகளை கொடுத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, சிகரெட் கொடுக்க மறுப்பு தெரிவித்து, இனி இதுபோன்று வந்து துன்புறுத்த கூடாது என்றும் மீறினால் போலீசை கூப்பிடுவேன் என்றும் விவேக் கூறியதும், ஆத்திரமடைந்த அந்நபர், சென்று விட்டு சிறிது நேரத்திற்கு பின் திரும்பி, சுத்தியலுடன் வந்து கொடூர தாக்குதல் நடத்தியுள்ளான் என கூறியுள்ளார். அந்த நபர் ஒரு போதை ஆசாமி என்றும் சைக்கோ என்றும் அவர் கூறியுள்ளார். சைனியின் மறைவால், அவருடைய பெற்றோர் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்