அமெரிக்கா: கார் விபத்தில் சிக்கி 2 இந்திய மாணவர்கள் பலியான சோகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இருவரும் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2024-04-22 14:14 GMT

நியூயார்க்,

இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்கள் முக்கா நிவேஷ் (வயது 19) மற்றும் கவுதம் பார்சி. நிவேஷ், கரீம்நகர் மாவட்டத்தின் ஹுசுராபாத் நகரை சேர்ந்தவர். கவதம், ஜங்காவன் மாவட்டத்தின் ஸ்டேசன் கான்பூர் நகரை சேர்ந்தவர்.

அவர்கள் இருவரும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவுக்கான பொறியியல் படிப்பை படித்து வந்துள்ளனர். இந்நிலையில், அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு கார் ஒன்று அவர்களுடைய கார் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த மோதலில், இந்திய மாணவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அரிசோனா போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை கைப்பற்றினர்.

இதன்பின்னர், அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில், இவர்கள் சென்ற கார் மீது மோதிய வாகனத்தின் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 20-ந்தேதி இந்த கொடிய விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. அவர்களின் மறைவுக்கு அரிசோனா போலீசார் இரங்கல் வெளியிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்