'18 வயது வரையில் அனைத்து மாணவர்களும் கணிதம் படிக்க வேண்டும்' - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் விருப்பம்
வேலைகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவில், கூடுதல் அளவிலான பகுப்பாய்வு திறன் தேவைப்படுவதாக ரிஷி சுனக் கூறினார்.
லண்டன்,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புத்தாண்டில் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் இங்கிலாந்து மாணவர்கள் அனைவரும் 18 வயது வரையில் கணிதத்தை படிப்பதை உறுதி செய்வதற்கான திட்டம் கொண்டு வர விருப்பம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "எல்லா இடங்களிலும் வேலைகளுக்கு தரவுகளும், புள்ளி விவரங்களும் முக்கியமாகி விட்ட இன்றைய உலகில், நமது குழந்தைகளின் வேலைகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவில், கூடுதல் அளவிலான பகுப்பாய்வு திறன் தேவைப்படும்.
இந்த திறன்கள் இன்றி நமது குழந்தைகள் வெளி உலகுக்கு சென்றால், அவர்களை நாம் கீழே விழச் செய்வதாகத்தான் கருத வேண்டும்" என தெரிவித்தார். ஆனால் இங்கிலாந்தில் 16 முதல் 19 வயது வரையிலானோரில் பாதிப்பேர்தான் கணிதத்தை படிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.