அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை - இஸ்ரேல் அதிரடி
அல் ஜசீரா செய்தி நிறுவனம் தங்கள் நாட்டில் செயல்பட இஸ்ரேல் தடை விதித்துள்ளது.;
ஜெருசலேம்,
காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
அதேவேளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 34 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. அதேபோல், ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவினரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு அளித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது. இஸ்ரேலிலும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தற்போது அச்செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் மந்திரி சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு விரைந்த இஸ்ரேலிய அதிகாரிகள் அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.