காசாவில் 25 மருத்துவமனைகளை முடக்கியது இஸ்ரேல்
இஸ்ரேலின் இத்தகைய ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
காசா,
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.
ஆரம்பத்தில் வான் வழியாக மட்டும் காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் பின்னர் கடல் மற்றும் தரைவழியாகவும் தாக்குதல்களை விரிவுப்படுத்தியது.
அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ஹமாசை ஒழிக்கும் வரையில் எத்தனை மாதங்கள் ஆனாலும் போரை தொடருவோம் என சூளுரைத்துள்ளது.
அதே சமயம் போரின் இலக்கை விரைவில் எட்டும் நோக்கில் இஸ்ரேல் படைகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், காசாவில் அனைத்து வழியிலான தாக்குதல்களையும் விரிவுப்படுத்தி வருவதாகவும் இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.
அதன்படி தெற்கு காசாவில் தீவிர குண்டுவீச்சுக்கு மத்தியில் இஸ்ரேல் தரைப்படை வேகமாக முன்னேறி வருகிறது. பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து மக்களை இடம்பெயரச் சொல்லிய பகுதிகளிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றன.
இதில் அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றனர். நேற்று தெற்கு காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பகுதியில் குண்டு வீசப்பட்டதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 23 பேர் பலியாகினர்.
அதேபோல் மத்திய காசாவில் அமைந்துள்ள மகாஜி அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர வடக்கு காசா உள்ளிட்ட பிற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இஸ்ரேலின் இத்தகைய ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காசா மீதான இஸ்ரேல் போரில் அங்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர். இது தவிர இஸ்ரேலின் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில், காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இஸ்ரேல் தாக்குதலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
எஞ்சியுள்ள 11 மருத்துவமனைகளும் ஓரளவு மட்டுமே செயல்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து ஐ.நா. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காசாவிலிருந்தபடி உலக சுகாதார அமைப்பின் ரிச்சர்ட் பீப்பர்கார்ன் கூறியதாவது:
காசாவிலுள்ள 3-இல் ஒரு பகுதிக்கும் குறைவான மருத்துவமனைகள்தான் ஓரளவுக்கு இயங்கி வருகின்றன. வெறும் 66 நாட்களில் காசாவின் சுகாதாரக் கட்டமைப்பு சீர்க்குலைக்கப்பட்டுவிட்டது. 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் செயல்படமுடியாமல் முடங்கியுள்ளன.
வடக்கு காசாவில் ஒன்று, தெற்கு காசாவில் 10 என மொத்தம் 11 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அவையும் முழுமையாக இயங்கவில்லை. காசாவில் நடத்தப்படும் தாக்குதலால் மருத்துவமனைகளும், பிற சுகாதாரக் கட்டமைப்புகளும் இதற்கு மேலும் நிலைகுலைந்தால் அது தாங்கமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும். அத்தகைய கொடுமையான நிலை ஏற்படக்கூடாது என்று வேண்டுகிறோம் என்றார்.