ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் - இந்தியாவை மீண்டும் பாராட்டிய இம்ரான்கான்

ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.;

Update:2022-05-22 03:57 IST

இஸ்லாமாபாத்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த சில மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன.

இந்தியாவும் மலிவு விலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ9.50-ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.7-ம் குறைத்து இந்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விவாகரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், குவாட் அமைப்பில் உறுப்பினராக இருந்தபோதும் தனது நாட்டு மக்களின் நலனுக்காக அமெரிக்காவின் அழுத்தையும் மீறி ரஷியாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதைத்தான் தன்னிச்சையான வெளியுறவுக்கொள்கை மூலம் எனது தலைமையிலான பாகிஸ்தான் அரசும் செயல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், தற்போதைய பாகிஸ்தான் அரசு வெளிநாட்டு அழுத்தம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பொருளாதார சிக்கலால் தலையற்ற கோழி போல அங்கும் இங்கும் சுற்றித்திரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்