நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு : நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் கருத்துக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம்

தலீபான் தலைமையிலான அரசாங்கம், முகமது நபிக்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-07 08:04 GMT

Image Courtesy : AFP 

புதுடெல்லி,

பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக மராட்டிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல் நவீன் ஜிந்தால் தனது டுவிட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைமையிலான அரசாங்கம், முகமது நபிக்கு எதிராக நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்தியாவில் ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரபூர்வ உறுப்பினர் நபிக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் வன்மையாகக் கண்டிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.



மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புனிதமான இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தவும், இஸ்லாமியர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் இதுபோன்றவற்றை அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்