செங்கடலில் மேலும் ஒரு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட டிரோன் செங்கடலில் கப்பல் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-06-24 05:55 GMT

கோப்பு படம்

துபாய்:

காசாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுவான ஹவுதி அமைப்பு களமிறங்கி உள்ளது. ஏமனின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி அமைப்பினர், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து செங்கடல் பகுதியில் செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

செங்கடல் பகுதியில் கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை 60-க்கும் மேற்பட்ட தாக்குதலை நடத்தி உள்ளனர். ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 மாலுமிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு கப்பலைக் கைப்பற்றியுள்ளனர். இரண்டு கப்பல்களை மூழ்கடித்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் மற்றும் அதன் நட்பு நாடுகளும் கடந்த சில மாதங்களாக ஏமன் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றன.

இந்நிலையில், செங்கடலில் சென்றுகொண்டிருந்த மேலும் ஒரு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த முறை லைபீரிய கொடியுடன் வந்த கிரீஸ் நாட்டு உரிமையாளரின் சரக்கு கப்பல் தாக்கப்பட்டுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹொடைடா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டன் ராணுவத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டதாகவும், ஆனால் அதில் இருந்த கடற்படையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதை ஹவுதி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ உறுதி செய்தார். இதேபோல் இந்திய பெருங்கடலில் ஸ்டோல்ட் செக்வோயா என்ற கப்பலும் தாக்கப்பட்டதாக கூறினார். இந்த கப்பல்கள், ஆக்கிரமிப்பு பாலஸ்தீன துறைமுகங்களுக்குள் நுழைவதற்கான தடையை மீறிய நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்