பிலிப்பைன்சில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு- 3 பேர் பலி

தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

Update: 2023-12-03 07:22 GMT

மணிலா:

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலையில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது திடீரென அங்கு குண்டு வெடித்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டு உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் துடித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தினர். இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் போலீசார் அப்பகுதியைச் சுற்றி வளைத்து, ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டனர். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மராவி நகரில் நடந்த இந்த தாக்குதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தீவிரவாத செயல் என்பது தெளிவாக தெரிகிறது என்றும், இரண்டு நபர்களுக்கு இடையிலான சாதாரண மோதலாக இருக்க முடியாது என்றும் பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரி கூறியிருக்கிறார்.

குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும், பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி இயங்கி வரும் இஸ்லாமிய போராளிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மசூதிகள் நிறைந்த இந்த நகரத்தை 2017-இல் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்த இஸ்லாமிய போராளிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். பின்னர் ராணுவம் வான் தாக்குதல் நடத்தி முற்றுகையை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த மோதலில் 1,100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய போராளிகள்.

ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் பிலிப்பைன்சின் தெற்கு பகுதியானது சிறுபான்மை முஸ்லிம்களின் தாயகமாக உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக பிரிவினைவாத கிளர்ச்சிகள் ஏற்பட்டு அமைதியற்ற நிலை காணப்பட்டது.

மிகப் பெரிய ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி, 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஏற்காத சிறிய ஆயுதக் குழுக்கள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்துகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்