செங்கடல் பகுதியில் தாக்கப்பட்ட ரூபிமார் கப்பல் மூழ்கியது.. போரில் அழிந்த முதல் கப்பல்

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் ரூபிமார் கப்பல் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2024-03-03 10:06 GMT

துபாய்:

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரில் ஹமாசுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ள ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லக்கூடிய கப்பல்களை தொடர்ந்து தாக்குகின்றனர். தாக்குதலில் சில கப்பல்கள் சேதமடைந்துள்ளன. ஹவுதி தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி பல்வேறு கப்பல்கள் மாற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட ஒரு சரக்கு கப்பல் செங்கடலில் மூழ்கிவிட்டது. பாப் எல்-மாண்டெப் ஜலசந்தியில் உள்ள நீர்வழிப் பாதையில் பயணித்த ரூபிமார் என்ற சரக்கு கப்பல் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கப்பட்டது. இதனால் கடுமையாக சேதமடைந்த அந்த கப்பலை வடக்கு நோக்கி செலுத்தினர். ஆனால் கப்பலில் இருந்த உரம் மற்றும் எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. பின்னர் கப்பலுக்குள் தண்ணீரும் புகுந்ததால் கப்பல் மூழ்கிவிட்டது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் ரூபிமார் கப்பல் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. கப்பல் மூழ்கும்போது எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டது.

கப்பலில் இருந்த சுமார் 21,000 மெட்ரிக் டன் அம்மோனியம் பாஸ்பேட் சல்பேட் உரம் செங்கடலில் சுற்றுச்சூழல் அபாயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அந்த பாதையை கடக்கும் மற்ற கப்பல்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க ராணுவம் கூறியிருக்கிறது.

இதன்மூலம், இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதலில் முதல் முறையாக ஒரு கப்பல் முழுமையாக அழிந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்