சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே வெடிகுண்டு கவசம் அணிந்த நபரால் பரபரப்பு
சுவிட்சர்லாந்து நாட்டின் நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே வெடிகுண்டு கவசம் அணிந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
பெர்னே,
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் பெர்னேவில் அமைந்த நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில்களில் ஒன்றின் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர் காணப்பட்டு உள்ளார்.
இதுபற்றி பெர்னே நகர போலீசார் கூறும்போது, அரண்மனை பகுதியின் தெற்கு நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டு இருந்துள்ளார். அவரை மத்திய பாதுகாப்பு படை பணியாளர்கள் நேற்று மதியம் கண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்நபரிடம் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட சோதனையில், விரைவு பரிசோதனையில் அவரிடம் வெடிகுண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடக்க விசாரணையில் அந்நபர் பண்டிஸ்பிளாட்ஜ் பகுதிக்கு காரில் சென்றதும், அதன்பின்னர் பண்டிஷாஸ் நகருக்கு அவர் சென்றதும் தெரிய வந்து உள்ளது.
இவற்றின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பின் அந்நபர் ஒப்படைக்கப்பட்டார். உடனடியாக அந்நபரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த காரில் வெடிகுண்டுகள் இருந்ததும் மறுப்பதற்கு இல்லை என போலீசார் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
உடனடியாக பண்டிஸ்பிளாட்ஜ் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அருகேயுள்ள பல தெருக்களை தங்களது வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்தனர்.
நாடாளுமன்ற கட்டிடம் உள்பட அரண்மனையின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அது தொடர்புடைய அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு மற்றும் வெடிகுண்டு துறை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காரை பரிசோதிக்கவும் முடிவானது. ஆளில்லா விமானங்கள் மற்றும் மோப்ப நாய் ஒன்றும் பணியின் ஒரு பகுதியாக அதில் ஈடுபடுத்தப்பட்டது.
இறுதியில் காரால் ஆபத்து எதுவும் இல்லை என இறுதி கட்ட விசாரணையில் தெரிந்த பின்னர், நேற்று இரவு 7 மணியளவில், அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நீக்கப்பட்டன என போலீசார் தெரிவித்தனர்.
எனினும், நகர போலீசாருடன் இணைந்து மத்திய வழக்கறிஞர்கள் அலுகலகம், குற்ற புலனாய்வு விசாரணையை தொடர்ந்து வருகிறது.