விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில்... இந்திய இளம்பெண் திடீர் மரணம்

ஆஸ்திரேலியாவில் இந்திய இளம்பெண் விமானத்தில் ஏறியதும் சீட் பெல்ட்டை அணிந்தபோது, மயங்கி சரிந்து அந்த இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

Update: 2024-07-01 20:27 GMT

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணான மன்பிரீத் கவுர் (வயது 24) என்பவர் புறப்பட்டு உள்ளார்.

2020-ம் ஆண்டு அந்நாட்டுக்கு சென்ற அவர், 4 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தன்னுடைய குடும்பத்தினரை பார்ப்பதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டு இருக்கிறார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டதுபோல் உணர்ந்திருக்கிறார்.

எனினும், விமானத்திற்குள் வந்த அவர், விமானம் புறப்படும் முன் அணிய கூடிய சீட் பெல்ட்டை அணிந்தபோது, மயங்கி சரிந்துள்ளார். அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்து உள்ளார்.

அப்போது விமானம் மெல்போர்னில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. இதுபற்றி தெரிய வந்ததும், உடனடியாக விமான ஊழியர்களும், அவசரகால பணியாளர்களும் உதவிக்காக ஓடி சென்றனர். அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்க கூடும் என நம்பப்படுகிறது.

சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற நோக்கங்களுடன் ஆஸ்திரேலியாவில் சமையல் கலையை படித்து வந்திருக்கிறார். கூடவே, வேலையும் செய்து வந்திருக்கிறார். அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்