பாகிஸ்தானில் தேசியக்கொடி விற்கும் கடையில் குண்டு வீச்சு - ஒருவர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தேசியக்கொடி விற்கும் கடையில் குண்டு வீசிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Update: 2022-08-05 18:56 GMT

கராச்சி,

பாகிஸ்தானில் வருகிற 14-ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் தேசியக் கொடிகள் மற்றும் பிற அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குவெட்டா நகரில் தேசியக்கொடிகள் விற்கும் கடை ஒன்றில் மக்கள் தேசியக்கொடிகளை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அந்த கடையின் மீது கையெறி குண்டை வீசி விட்டு தப்பி சென்றனர்.

கையெறி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்