தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு - மீட்புப்பணிகள் தீவிரம்
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்துள்ளது.
தைபே,
கிழக்கு ஆசிய நாடான தைவானின் தலைநகரான தைபேவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஹூவாலியன் நகரில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானதாக தைவான் அரசு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலம் மற்றும் நீர் பரப்பையொட்டிய பகுதியில் 32 கி.மீ ஆழத்தில் 7.4 புள்ளிகளை கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் நிறுவனம் கூறுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தைவான் நாட்டின் முக்கிய நகரங்கள் பூமி அதிர்ச்சிக்குள்ளாகி குலுங்கின. கட்டிடங்கள் பெயர்ந்து சீட்டுக்கட்டு போல சரிந்தன. ரெயில் தண்டவாளங்களில் விரிசல் ஏற்பட்டு ரெயில்கள் தடம்புரண்டன. சாலைகள் இரண்டாக பிளந்தன. மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கியது. காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் எதிரொலியாக மக்கள் அலறியடித்து கொண்டு வீதிகளில் ஓட்டம்பிடித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். இதனை தொடர்ந்து தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாகியது
தைவானில் தொடர் நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி அலைகள் மேலெழும்பின. சீனாவின் ஷாங்காய் உள்ளிட்ட மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தைவானில் நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கினர். இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி உடல் நசுங்கி இறந்தவர்களில் 9 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. படுகாயம் அடைந்த 800-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆபத்தானநிலையில் பலர் உயிருக்கு போராடி வருகிறார்கள். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.