3 ஆண்டுகளில் 7 கொலைகள்...!! சீனாவில் பெண் சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

லாவோவின் காதலர் ஜியிங் கடந்த 1999-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-12-19 06:11 GMT

பீஜிங்,

சீனாவை சேர்ந்த பெண் சீரியல் கில்லர் லாவோ ராங்சி (வயது 49). 1996 முதல் 1999 வரையிலான 3 ஆண்டுகளில் கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் 7 பேர் கொடூர கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக போலீசார் அவரை தேடி வந்தனர்.

20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி புஜியான் மாகாணத்தில் ஜியாமென் நகரில் வாட்ச் விற்பனையில் ஈடுபட்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றிய வழக்கு விசாரணையில், லாவோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் நான்சங் பகுதியில் உள்ள கோர்ட்டு ஒன்றில் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ததில், அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி அந்த கோர்ட்டு வெளியிட்ட செய்தியில், சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதல் பெறப்பட்டதும் திங்கட்கிழமை காலையில் லாவோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என தெரிவித்து உள்ளது.

அவருடைய மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு முன் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என லாவோ விரும்பியுள்ளார். அந்த விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

அவருக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது, கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் நிறுத்தி கொண்டேன். கொலை சம்பவங்களுக்கு முன்னாள் காதலரான பா ஜியிங்கே காரணம் என கூறினார். தொடர் குற்றங்களில் சிறிய அளவிலேயே அவர் பங்காற்றினார். காதலருக்கு உதவியாகவே செயல்பட்டார் என லாவோவின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ஆனால், கோர்ட்டு அதனை ஏற்க மறுத்தது. லாவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் அழுதபடி மன்னிப்பு கோரினார். இழப்பீடு வழங்கவும் தயார் என கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது கூறினார். லாவோவின் காதலர் ஜியிங் கடந்த 1999-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்