அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்.85 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின
புயலை தொடர்ந்து டென்னசி மாகாணத்தின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. பலத்த காற்று வீசியதில் பல வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மேலும் பல வாகனங்கள் சாலைகளில் கவிழ்ந்து கிடந்தன. புயலை தொடர்ந்து கென்டக்கி, நாஷ்வில்லி, மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பல வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் சுமார் 85 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.