துருக்கி: இஸ்தான்புல்லில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் குண்டுவெடிப்பு - 6 பேர் பலி; 53 பேர் படுகாயம்!

இஸ்தான்புல்லின் பரபரப்பான இஸ்திக்லால் கடை வீதி பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது.;

Update:2022-11-13 21:31 IST

இஸ்தான்புல்,

துருக்கியில் தலைநகர் இஸ்தான்புல்லில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்லின் பரபரப்பான இஸ்திக்லால் கடை வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த பிரதான நடைபாதை வீதியில் ஏராளமானோர் காணப்படுவர்.இங்கு பல கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. இங்கு இதற்கு முன் 2015 மற்றும் 2017ல் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

வெடிவிபத்தையடுத்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. போலீசாரும் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை தொடங்கினர். குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்