கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020-ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர் - உலக வங்கி அறிக்கை

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020-ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2022-10-14 03:59 GMT

ஜெனீவா,

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சர்வதேச அளவில் கரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொழிலக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்தது. கரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020-ல் மட்டும் உலகளவில் 7.1 கோடி பேர் மிக வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதில், 79 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, கரோனா பேரிடரால் மட்டும் இந்தியாவில் 5.6 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு ஆளாகினர். சர்வதேச தீவிர வறுமை விகிதம் கடந்த2019-ல் 8.4 சதவீதமாக காணப்பட்ட நிலையில் 2020-ல் அது 9.3 சதவீதமாக அதிகரித்தது.

அதன்படி, 2020-ல் 7.1 கோடிபேர் தீவிர வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டதையடுத்து உலக அளவில்உள்ள மொத்த ஏழை மக்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்ந்தது.

சர்வதேச அளவில் வறுமையின் அதிகரிப்பில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பங்கே மிகப்பெரிய அளவில் இருந்தது. இருப்பினும், சீனா விஷயத்தில் இந்த கருத்து எதிர்மறையாகவே இருந்தது. ஏனெனில், சீனா அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும் கடந்த 2020-ல் ஏற்பட்ட வறுமையின் அதிகரிப்பில் அந்த நாட்டின்பங்கு சிறிய அளவுக்கே இருந்தது.இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அங்கு வறுமையின் பிடியில் சிக்கியோர் எண்ணிக்கை மிகக் குறைவு.

வறுமையை அளவிட உதவும் நுகர்வோர் பிரமிட்கள் குடும்ப ஆய்வு (சிபிஹெச்எஸ்) குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து இந்திய அரசு வெளியிடவில்லை. உலகளாவிய மற்றும் பிராந்திய வறுமை மதிப்பீடுகளில் முக்கியமான இடை வெளியை நிரப்ப சிபிஹெச்எஸ் தரவு மிக உதவியாக உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர், சீன வளர்ச்சியில் மந்தநிலை, உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு ஆகியவை உலக வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் 2022-ல் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மேலும் தடைபடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்