42 பெண்கள்... கவர்ந்து பேசி, கொன்று, உடல்களை கூறுபோட்ட சீரியல் கில்லர்

கென்யாவில் குவாரி ஒன்றில் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 10 பெண்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-17 04:52 GMT

நைரோபி,

கென்யாவின் நைரோபி நகரில் முகுரு என்ற பகுதியில் பயன்படுத்தப்படாத குவாரி ஒன்று உள்ளது. இதில் உள்ள குப்பை போடும் கிடங்கில் பிளாஸ்டிக் பைகளில், துண்டுகளாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட 10 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி கென்ய தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் பற்றி குற்ற புலனாய்வு துறையின் இயக்குநரக தலைவர் முகமது ஆமீன் செய்தியாளர்களிடம் கூறும்போது, காலின்ஸ் ஜுமைசி கலூஷா (வயது 33) என்பவர் இந்த படுகொலைகளை செய்துள்ளார்.

விசாரணையில் இதனை அவர் ஒப்பு கொண்டிருக்கிறார். 2 ஆண்டுகளாக அவர் 42 பெண்களை படுகொலை செய்திருக்கிறார். இதில், முதலில் அவரிடம் சிக்கி உயிரிழந்தது அவருடைய மனைவி ஆவார் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். கியாம்பு நகரில் உள்ள கியாம்பு சட்ட நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 30 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அவரை பற்றி போலீசார் கூறும்போது, ரத்தம் உறிஞ்சும் காட்டேரி என்றும் மனநோயாளி என்றும் கூறினர். கலூஷா, யூரோ கால்பந்து போட்டி 2024-யை பார்த்து கொண்டிருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர், மற்றொரு பெண்ணை சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்து உள்ளார்.

அவருடைய வீடும், அந்த உடல்கள் கிடைத்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால், அந்த பகுதியே பரபரப்பாக உள்ளது. கென்யாவில் அரசின் வரி உயர்வு திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சூழலில், இந்த சம்பவம் அதிபர் வில்லியம் ரூட்டோவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், இந்த படுகொலைக்கான காரணம், நோக்கம் மற்றும் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்