ரஷியாவில் வெடிமருந்து ஆலை விபத்து - 4 பேர் பலி
ரஷியாவில் கொட்டோவ்ஸ்க் நகரில் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்தது.
மாஸ்கோ,
நேட்டோ உடன் உக்ரைன் இணைய விரும்புவதை எதிர்த்து ரஷியா அதன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 15 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. இதனால் இருநாடுகளிலும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது.
ரஷியாவின் தென்மேற்கின் டாம்போர் பகுதியில் உள்ள கொட்டோவ்ஸ்க் நகரில் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதில் தயாரிக்கப்படும் வெடிமருந்துகளை உக்ரைனுக்கு எதிரான போரில் அந்த நாட்டின் ராணுவம் பயன்படுத்தி வந்தது.
இதனால் தொழிலாளர்கள் மும்முரமாக வெடிமருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வெடி விபத்து நிகழ்ந்தது. இதனால் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடப்பதாக அந்த நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.