சிரியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 34 பேர் பலி
சிரியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்,
உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் ஆபத்தில் முடிந்து விடுகிறது.
இந்த நிலையில் லெபனானில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் புறப்பட்ட படகு ஒன்று நேற்று சிரியாவின் கடற்கரை நகரமான டார்டவுஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
சிரியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிரியா கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். எனினும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 34 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.