ஈகுவேடாரில் 3 இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொன்று புதைப்பு... 'ஆபத்து' குறித்து இறுதியாக அனுப்பிய தகவல்

உயிரிழந்த பெண்கள் கடைசியாக தங்கள் உறவினர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலை அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2023-04-18 15:28 GMT

குவிட்டோ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவேடாரின் சாண்டோ டொமிகோ பகுதியைச் சேர்ந்த நயேலி டாபியா(22), யூலியானா மசியாஸ்(21) மற்றும் டெனிஸ் ரெய்னா(19) ஆகிய 3 இளம்பெண்கள், கடந்த 4-ந்தேதி நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு தங்கள் வீடுகளில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.

ஆனால் அதன் பிறகு அவர்கள் எங்கு சென்றனர் என்பது குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அந்த பெண்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சாண்டோ டொமிகோ பகுதியில் இருந்து சுமார் 84 கி.மீ. தொலைவில் உள்ள எஸ்மெரால்டஸ் நதியின் கரையில், 3 பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கடந்த 7-ந்தேதி மீனவர்கள் சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அது காணாமல் போன 3 பெண்களின் உடல்கள் தான் என்பதை உறுதி செய்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பெண்கள் குளியல் ஆடைகளை அணிந்த நிலையில், கழுத்து அறுக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, உயிரிழந்த 3 பெண்களில் இரண்டு பேர் தங்கள் உறவினர்களுக்கு கடைசியாக வாட்ஸ் ஆப் மூலம் அதிர்ச்சியூட்டும் தகவலை அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது. நயேலி டாபியா தனது சகோதரிக்கு அனுப்பிய தகவலில், "ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன், அதற்காக உன்னிடம் தெரியப்படுத்துகிறேன்" என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதே போல், மற்றொரு பெண் தனது நண்பருக்கு அனுப்பிய மெசேஜில், "ஏதோ நடக்கப் போகிறது என்று உணர்கிறேன், எனக்கு ஏதாவது நடந்தால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை மறந்துவிடாதே" என்று கூறியுள்ளார். அந்த பெண்கள் இறுதியாக அனுப்பிய வாட்ஸ் ஆப் தகவல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த 3 பெண்களும் 5-ந்தேதி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். இதில் நயேலி டாபியா மாடல் அழகியாகவும், யூலியானா மசியாஸ் பாடகியாகவும் இருந்துள்ளனர். மேலும் டெனிஸ் ரெய்னா வேளாண்மை பொறியியல் படித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்