ஸ்பெயினில் குரங்கம்மை பாதிப்புக்கு 2வது நபர் உயிரிழப்பு

ஸ்பெயினில் குரங்கம்மை பாதிப்புக்கு 2 நாட்களில் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-07-31 02:16 GMT



கேடலோனியா,



குரங்கம்மை பாதிப்புக்கு இதுவரை ஆப்பிரிக்காவுக்கு வெளியே எந்தவொரு நாட்டிலும் உயிர்ப்பலி இல்லை என்ற நிலை இருந்து வந்த சூழலில், இந்த தொற்றுக்கு பிரேசில் நாட்டில் 41 வயது ஆண் ஒருவர் பலியாகி இருக்கிறார்.

இவர்தான் ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் பலியான முதல் நபர் என தகவல்கள் கூறுகின்றன. கடுமையான நோய் எதிர்ப்பு பிரச்சினைகள் இவருக்கு இருந்ததாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

ஸ்பெயின் நாட்டிலும் ஒருவர் இந்த தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். குரங்கு அம்மையால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உள்ளது. இந்த நிலையில், ஸ்பெயினில் குரங்கம்மை பாதிப்புக்கு 2வது நபர் உயிரிழந்து உள்ளார். இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும் இது இரண்டாவது உயிரிழப்பு ஆகும். எனினும் உயிரிழந்தவர் பற்றிய அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முதல் நபர் ஸ்பெயினின் கிழக்கே கம்யூனிடேட் வேலன்சியா பகுதியை சேர்ந்தவர். அவருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பும் இருந்துள்ளது.

அடுத்தடுத்து 2 நாட்களுக்குள் ஸ்பெயினில் குரங்கம்மை பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர். ஸ்பெயினில் குரங்கம்மை பாதிக்கப்பட்ட 4,298 பேரில் 64 பேர் பெண்கள் ஆவர். அவர்களில் 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

ஸ்பெயினில் 10 மாத குழந்தை மற்றும் 88 வயது முதியவர் என பல்வேறு வயது தரப்பினருக்கும் இந்த குரங்கம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்