துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக ஒரே நாளில் 2.86 லட்சம் பேர் பயணம்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மட்டும் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

Update: 2024-07-13 17:10 GMT

துபாய்,

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கும், சிலர் சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். இதனால் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மட்டும் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். கடந்த 12-ந் தேதி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை மட்டும் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் துபாய் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவையை விரைவுபடுத்தும் வகையில் ஊழியர்கள் அதிகஅளவு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு விமான நிலைய ஊழியர்களும் பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை 'செக் இன்' செய்வதில் விரைவாக செயல்பட்டனர். மேலும் அமீரகத்தில் குடியிருப்பு விசா பெற்றவர்கள் எலெக்ட்ரானிக் கேட் மூலம் தங்களது அமீரக அடையாள அட்டையை பயன்படுத்தி விரைவாக 'இமிக்ரேசன்' சோதனைகளை முடித்துக்கொண்டனர்.

ஒரு சில விமானங்கள் நேற்று வழக்கமான நேரத்தைவிட தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் சிலர் கூடுதல் நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். பயணிகள் நேற்று அதிகமாக வந்ததால் அவர்களை வழியனுப்ப வந்தவர்கள் விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியுடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் விமான நிலைய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பயணிகள் மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பொதுபோக்குவரத்து சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணி ஒருவர் மாலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்துக்கு மதியம் 12 மணிக்கே விமான நிலையத்துக்கு வந்து விட்டதாக கூறினார். இதேபோல் அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதிகளில் உள்ள விமான நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்