துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் 3-வது நாள்: பல்வேறு நாட்டு அரங்குகளை பார்வையிட்ட அமீரக துணை அதிபர்

துபாயில் 192 நாடுகளின் பங்களிப்புடன் 3-வது நாளாக வெற்றிகரமாக நடைபெறும் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில் துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பல்வேறு நாட்டு அரங்குகளை பார்வையிட்டு அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.

Update: 2021-10-03 19:57 GMT
துபாய்,

துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியின் தொடக்க விழாவை தொடர்ந்து 3-வது நாளான நேற்று காலை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் சென்று பார்வையிட்டார். அமீரக துணை அதிபருடன் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துணை ஆட்சியாளரும், அமீரக துணை பிரதமரும், நிதி மந்திரியுமான மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அவர்களை அமீரக சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை மந்திரியும், துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் தலைவருமான ரீம் அல் ஹாஷெமி மற்றும் கண்காட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர். முன்னதாக அந்த கண்காட்சி மையத்தின் தலைமை அலுவலகத்துக்கு பட்டத்து இளவரசர், அதிகாரிகள் குழுவினருடன் சென்ற துணை அதிபர் அங்கு ருவாண்டா நாட்டின் அதிபர் பவுல் ககேமை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது.

இதன் பிறகு துணை ஆட்சியாளர், பட்டத்து இளவரசருடன் கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நாட்டு அரங்குகளை பார்வையிட்டார். இதில் முதலாவதாக பக்ரைன் நாட்டின் அரங்கில், பாரம்பரிய பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததை பார்வையிட்டார்.

அதன் பிறகு கத்தார் நாட்டின் அரங்குக்கு சென்றார். அங்கு அந்நாட்டின் அதிகாரிகளுடன் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து உகாண்டா நாட்டின் அரங்குக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த அந்நாட்டின் அதிபர் யோவேரி முசவேனியை சந்தித்து பேசினார்.

உகாண்டா நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபருக்கு அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பில் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து 2 தலைவர்களும் பேசினர்.

இதையடுத்து குவைத், ரஷியா அரங்குக்கு சென்று அங்குள்ள புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை குறித்த காட்சியமைப்புகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பல்வேறு அரங்குகள் மற்றும் வளாகங்களை சுற்றி பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்