பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் பாகிஸ்தான் நாடு
பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் 140க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.;
கராச்சி,
பாகிஸ்தான் நாடு பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. இவற்றில் மின்னணு ஊடக பத்திரிகையாளர்களை விட, அச்சு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய இரு மடங்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.
அந்நாட்டில் பிற எந்த மாகாணங்கள் அல்லது பகுதியை விட சிந்த் மாகாணம் பத்திரிகையாளர்களுக்கு 3 மடங்கு ஆபத்து நிறைந்த பகுதியாக உள்ளது. இதன்படி பெருமளவில், தண்டனை சட்டத்தின் கீழ் 3ல் ஒரு பங்கு பத்திரிகையாளர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. மற்றொரு 3ல் ஒரு பங்கு பத்திரிகையாளர்களை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தும் சூழல் உள்ளது.
வேறு சிலர் மீது மின்னணு குற்றங்கள் அல்லது அவதூறு சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அரசுக்கு எதிராக செயல்படுதல் அல்லது அரசு அமைப்பின் புகழை கெடுப்பது என பத்திரிகையாளர்கள் மீது பொதுவான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
இது தவிர சட்டவிரோத வகையில் ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்கள், போதை பொருட்களை வைத்திருக்கின்றனர், தடை செய்யப்பட்ட இலக்கியங்களை வைத்திருக்கின்றனர், குடிமக்களை துன்புறுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்படுகிறது.
இதுபோன்ற பத்திரிகையாளர்களுக்கு எதிரான வழக்குகளில் 3ல் 2 பங்கு போலீசாரால் விசாரணை நடத்தி முடிக்கப்படுகிறது. ஆனால், அவற்றில் 50 சதவீதம் அளவுக்கே விசாரணைக்கு உகந்தது என ஏற்கப்படுகிறது. 60 சதவீத வழக்குகளில் விசாரணை முடிவடைவதில்லை. இதனால், பத்திரிகையாளர்கள் நிரபராதி என தங்களை நிரூபிக்க முடியாமல் போகிறது. 17 வழக்குகளில் 10ல் பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்காத நிலை காணப்படுகிறது.
அந்நாட்டில், கடந்த 2,000ம் ஆண்டில் இருந்து இதுவரை 140 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதனால், பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் விளங்குகிறது. கொலையாளிகளுக்கு 100 சதவீதம் மன்னிப்பு கிடைத்து விடுகிறது. கொல்லப்பட்ட 33 பத்திரிகையாளர்களுக்கு பூஜ்ய சதவீதம் கூட நீதி கிடைக்கவில்லை என்ற அவல நிலையே உள்ளது.