இந்திய எண்ணெய் கப்பலில் தீ: விபத்து குறித்த எச்சரிக்கையை கப்பல் அதிகாரிகள் புறக்கணித்தனர் - இலங்கை கோர்ட்டு தகவல்
இந்திய எண்ணெய் கப்பலில் தீ விபத்து குறித்த எச்சரிக்கையை கப்பல் அதிகாரிகள் புறக்கணித்தனர் என்று இலங்கை கோர்ட்டு தகவல் தெரிவித்துள்ளது.;
கொழும்பு,
குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான நியூ டைமண்ட் எண்ணெய் கப்பல் கடந்த 3-ந் தேதி இலங்கை கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்தார். 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இலங்கை கடற் படை, விமானப்படை, இந்திய கடற் படை, கடலோர காவல் படை என பல்வேறு தரப்பினரும் இணைந்து பல நாட்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் எண்ணெய் கப்பல் தீ விபத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தலைநகர் கொழும்புவில் உள்ள கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மாலுமிகள் விடுத்த எச்சரிக்கையை அதிகாரிகள் புறக்கணித்ததாகவும், கப்பலில் தீயணைப்பு கருவிகளை செயல்படுத்துவதை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
அதனைத் தொடர்ந்து தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 22 மாலுமிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி குற்றவியல் புலனாய்வுத்துறை கோர்ட்டு உத்தரவிட்டது.