அமெரிக்காவில் கருப்பர் படுகொலைக்கு காரணமான மினியாபொலிஸ் போலீஸ் துறையை கலைக்க முடிவு

அமெரிக்காவில் கருப்பர் படுகொலைக்கு காரணமான மினியாபொலிஸ் போலீஸ் துறையை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-08 23:13 GMT
மினியாபொலிஸ்,

அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகர போலீஸ் அதிகாரிகளின் பிடியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர் கொல்லப்பட்ட விவகாரம், அங்கு பூதாகரமாகி உள்ளது.

இதில் கொந்தளிப்பு அடைந்த கருப்பு இன மக்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கருப்பு இன மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு காரணமாக கூறப்படுகிற மினியாபொலிஸ் நகர போலீஸ் துறையை கலைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள நகர கவுன்சிலில் மொத்தம் உள்ள 13 கவுன்சிலர்களில் 9 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி நகர கவுன்சில் தலைவர் லிசா பென்டர் கூறி இருப்பதாவது:-

இங்கே மினியாபொலிஸ் நகரத்திலும், அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களிலும் தற்போதுள்ள நமது போலீஸ் மற்றும் பொது பாதுகாப்பு முறை நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை. சீர்திருத்தத்துக்கான நமது முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. நகர போலீஸ் துறையை மாற்றி அமைக்கும் திட்டத்தின் விவரங்களை மேலும் விவாதிக்க வேண்டியதிருக்கிறது. போலீஸ் துறைக்கான நிதியை சமூக ரீதியிலான உத்திகளுககு மாற்ற முயற்சிப்பேன் என்று அவர் கூறி உள்ளார்.

பின்னர் போலீஸ் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்கு நகர கவுன்சில் வாக்களித்தது.

இது தொடர்பாக கருப்பு இன மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிற மின்னசோட்டா மாகாணத்தை தளமாக கொண்ட பிளாக் விஷன் அமைப்பின் இயக்குனர் காண்டேஸ் மாண்ட்கோமெரி கருத்து தெரிவிக்கையில்,“ கருப்பு இன மக்களை வேட்டையாடுகிற மாகாணத்தின் ஆதரவுடன், ஆயுதம் ஏந்திய கணக்கிட முடியாத ரோந்து இல்லாமல் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்